காதல் கொலைகளால் ஏற்படும் வலியை சொல்லும் ‘புகார்’
ஸ்ரீமதுராஜா தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம், ‘புகார்’. இதை ‘ரூட்’ படத்தை இயக்கிய ஏ.சி.மணிகண்டன் இயக்குகிறார். கதாநாயகியாக ரஷ்மிதா நடிக்கிறார். 2-வது ஹீரோவாக ராஜ்கிரண் நடிக்கிறார்.
மேலும் ஜனுஷ்கா, மணி செல்வம் உள்பட பலர் நடிக்கின்றனர். க்ரைம் த்ரில்லராக இப்படம் உருவாகிறது. பிச்சைக்கனி, ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் பிரபு இசையமைக்கிறார்.
‘இன்றைய சூழலில் காதலால் பல ஆணவக் கொலைகள் அரங்கேறுகின்றன. அந்தக் குடும்பங்கள் சந்திக்கும் வலி, அதன்பிறகு அந்த குடும்பங்களின் நிலைமை என்ன ஆகிறது என்பது பற்றியும், காதலால் ஏற்படும் கொலைகளைத் தடுப்பதற்கு வழி சொல்லும் விதமாகவும் இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவிக்கிறது. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ‘கூகுள் குட்டப்பா’ படத்தை இயக்கிய குரு சரவணன் அடுத்து இயக்கும் படத்தில் சதீஷ், சாய்குமார் மகன் ஆதி ஆகியோர் நடிக்கின்றனர். தெலுங்கில் 10-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ள ஆதி சாய் குமார், இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். சரண்யா நாயகியாக நடிக்கிறார்.
சிங்கம்புலி, பிளாக் பாண்டி, சரவணன் உள்பட பலர் நடிக்கின்றனர். எஸ்ஜிஎஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில் ஜி.சுரேஷ் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘பீஸ்ட்’, ‘லியோ’ போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இதன் பூஜை சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் கே.பாக்யராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவுள்ளது.


