தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். கடந்தாண்டு கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு எண்ணிலடங்கா உதவிகளை செய்த சோனு சூட், இந்தாண்டும் அந்த பணியை தொடர்ந்து செய்து வருகிறார். இதுதவிர கொரோனா நோயாளிகளுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், சோனு சூட்டின் தீவிர ரசிகர் ஒருவர், அவரைப் பார்க்க ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு நடந்தே சென்றுள்ளார். வெங்கடேஷ் என்ற அந்த நபர் சுமார் 700 கி.மீ. வெறுங்காலில் நடந்து வந்ததை அறிந்த சோனுசூட், அந்த ரசிகரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு, இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார். மேலும் அவர் சொந்த ஊர் செல்லவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.