தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆனால், பொதுமக்கள் சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அலட்சியம் காட்டுகிறார்கள். இதனால் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தடுப்பூசி தொடர்பாக நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: “சமீப காலமாக சில வேதனையான விஷயங்களைக் கேள்விப்படுகிறேன். யாருமே சரியாக தடுப்பூசி போட்டுக் கொள்வதில்லை. செல்போன் வந்த பிறகு, நமக்கு நாமே மருத்துவர் ஆகிவிட்டோம். அக்கம்பக்கத்தினர், சொந்தக்காரர்கள், நண்பர்கள் என அனைவருமே மருத்துவர்கள் ஆகிவிட்டார்கள். அது எப்படி?.
மருத்துவத்துக்கு படித்தவர்கள் தான் மருத்துவராக இருக்க முடியும். அதனால் தடுப்பூசி பற்றி ஏதேனும் குழப்பம் இருந்தால், தெரிந்த மருத்துவரை அணுகுங்கள். அவர்கள் சரியான அறிவுரை வழங்குவார்கள். நம்ம உடம்புக்கு ஒன்றும் வராது என்று காலரை தூக்கிவிட்டுக் கொண்டு, இது சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட உடம்பு என்பது எல்லாம் இருந்துட்டு போகட்டும்.
ஆனாலும், நமது உடம்பைப் பற்றி நம்மை விட மருத்துவர்களுக்கு தான் நன்றாகத் தெரியும். அதற்குத்தான் அவர்கள் மருத்துவத்துக்கு படித்துள்ளார்கள். நான் சொல்வதைக் கூட கேட்காதீர்கள். நான் என்ன மருத்துவரா?
சமீபத்தில் கேட்கும் விஷயம் எல்லாம் மனவேதனையை தருகிறது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி, கிருமி நாசினி மூலம் கையை சுத்தப்படுத்துவது எல்லாம் அனைவரும் செய்கிறார்கள். ஆனால், இந்த தடுப்பூசி விஷயத்தில் பெரிய குழப்பம் இருக்கிறது. தயவுசெய்து மருத்துவர்களை அணுகி அறிவுரையை பெற்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்”. இவ்வாறு சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
Taking vaccine is important please do consult your Dr for any assistance or queries, #StayHomeStaySafe #Wearamask ???? Maintain Social distance. Don't believe in rumours trust your Dr's if you have any doubt or inhibition in taking the vaccine.#Sathyaraj pic.twitter.com/fO2k5mn3Se
— NadigarSangam PrNews (@NadigarsangamP) May 29, 2021