நகரத்தில் பல இடங்களில் கால் டாக்ஸி டிரைவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டு அவர்களது கார்கள் திருடு போகிறது. கால் டாக்ஸி டிரைவராக இருக்கும் சந்தோஷ் சரவணனின் சக தோழர்களே ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். இதனால் கால் டாக்ஸி ஓட்டுவதற்கே அச்சம் ஏற்படுகிறது.
இதில் ஈடுபட்டுள்ள மர்ம கும்பலை கண்டுபிடித்து பழிவாங்க சந்தோஷ் சரவணன் முயல்கிறார். அவரது முயற்சி வெற்றி அடைந்ததா? மர்ம கும்பல் பிடிபட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் சந்தோஷ் சரவணன், தமிழ் சினிமாவிற்கு நல்ல அறிமுகம். ஆக்ஷன், உணர்வுபூர்வமான காட்சிகளில் நன்றாக நடிப்பவருக்கு, காதல் காட்சிகளில் நடிக்க மட்டும் பயிற்சி தேவை. நண்பர்கள் கொலையானதும் வெகுண்டெழுவதும் கொலைகார கும்பல் பற்றி விசாரிக்கும் காட்சிகளிலும் தேறுகிறார். கால் டாக்ஸி டிரைவர்களின் நிலையை எடுத்து சொல்லும்போது பரிதாபம் கொள்கிறார்.
அஸ்வினிக்கு வழக்கமான கதாநாயகி வேடம் தான். வழக்கறிஞராக வரும் அவரையும் விசாரணைக்கு பயன்படுத்தி இருக்கலாம். நான் கடவுள் ராஜேந்திரன், கணேஷ்கர் இருவரும் படத்தை கலகலப்பாக நகர்த்துகிறார்கள். ஈ.ராமதாஸ், பசங்க சிவகுமார், சந்திரமவுலி, திலீபன் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு கதையை உருவாக்கி இருக்கிறார் பா.பாண்டியன். திரைக்கதையில் இன்னும் கூட வேகம் கூட்டி இருக்கலாம். இருந்தாலும் விழிப்புணர்வு தரும் படமாகவே கால் டாக்ஸி அமைந்துள்ளது.
பாணரின் இசையில் பாடல்கள் மனதில் பதியும்படி இல்லாவிட்டாலும், பின்னணி இசை மூலம் விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார். எம்.ஏ.ராஜதுரையின் ஒளிப்பதிவு திகில் கூட்டுகிறது. டேவிட் அஜய்யின் படத்தொகுப்பு கச்சிதம்.