Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ ஜன.14-ல் ரிலீஸ்: படக்குழு அறிவிப்பு

Karthi's 'Vaa Vaathiyaar' to release on Jan. 14: Film crew announces
கார்த்தியின் ‘வா வாத்தியார்’ ஜன.14-ல் ரிலீஸ்: படக்குழு அறிவிப்பு

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் தயாராகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி நாளை 14-ந்தேதி வெளியாகும் என படக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவும் தொடக்கியுள்ளது. இது குறித்து ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,

‘சினிமா என்பது திரையில் காட்டப்படும் கதைகளை விட மேலானது; அது இதயத் துடிப்பை பகிர்வது. குறிப்பாக பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில், பார்வையாளர்களும், கலைஞர்களும், திரையுலகப் படைப்பாளிகளும் ஒன்றிணையும் ஒரு திருவிழா அது. அப்போது குடும்பங்கள் ஒன்று கூடி பெரிய திரையின் மாயாஜாலத்தைக் கொண்டாடுகின்றன.

எங்கள் ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாவதாக முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், தவிர்க்க முடியாத சில காரணங்களால், திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியவில்லை.

தற்போது, ​​’வா வாத்தியார்’ திரைப்படம் ஜனவரி 14 அன்று, பொங்கல் பண்டிகை வெளியீடாக உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். இந்த நேரம் ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தை சரியாக பிரதிபலிக்கிறது.

‘வா வாத்தியார்’ படத்துடன் வெளியாகும் அனைத்துப் படங்களுக்கும், வரும் மாதங்களில் வெளியாகவிருக்கும் ஒவ்வொரு படத்திற்கும் எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஒவ்வொரு கதையும் அதன் பார்வையாளர்களைக் கண்டடையட்டும், மேலும் நமது திரையுலகம் தொடர்ந்து வலிமையுடன் வளரட்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. இதில் கார்த்தி, ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

முன்னதாக, ‘வா வாத்தியார்’ பட விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், மீதமுள்ள கடன் தொகையை செலுத்தினால் படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் என அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, வெளியீட்டுச் சிக்கல் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.

Karthi's 'Vaa Vaathiyaar' to release on Jan. 14: Film crew announces
Karthi’s ‘Vaa Vaathiyaar’ to release on Jan. 14: Film crew announces