‘வா வாத்தியார்’ எப்போது ரிலீஸ்?
கார்த்தி நடிப்பில் உருவான ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது. இப்படத்தின் மீதிருந்த பைனான்ஸ் பிரச்சினையால் வெளியாகவில்லை. டிசம்பர் 12-ம் வெளியீடுக்கு திட்டமிட்டப்பட்டு, பின்பு டிசம்பர் 24-ம் தேதி வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டது.
தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினால் டிசம்பர் 24-ம் தேதி வெளியீட்டுக்கும் வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது கோடை விடுமுறைக்கு ‘வா வாத்தியார்’ படத்தினை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
அதற்குள் படத்தின் மீதான அனைத்து பிரச்சினைகளையும் முடிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். இது குறித்து விரைவில் ‘வா வாத்தியார்’ படக்குழுவினரிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகும் என தெரிகிறது.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்தி உடன் ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
இதற்கிடையில் கார்த்தி ‘மார்ஷல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படமும் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.


