சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu!
விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் லலித்தின் மகன் அகசய் சிறைக் கைதியாக நடித்திருக்கிறார். ஒரு போலீஸ்காரருக்கும் கைதிக்குமான உறவைச் சொல்லும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் படம் பற்றி விக்ரம் பிரபு தெரிவிக்கையில்,
‘டாணாக்காரன்’ படத்தை இயக்கிய தமிழ்தான் ‘சிறை’ கதையை எழுதியிருக்கார். ‘ஒரு போலீஸ் கதை இருக்கு, கேட்கிறீங்களா? என அவர் கேட்டதும் ‘டாணாக்காரன்’ படத்திற்கு பிறகு, போலீஸ் கதைகளா நிறைய வருது. இதுவும் போலீஸ் கதையா?’ என கேட்டேன்.
‘நேர்ல சொல்றேன் கேளுங்க’ன்னு வந்தார். சொன்னார். ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. நிறைய புது விஷயங்களும் இருந்தது.
வெற்றிமாறன் சார்ட்ட ஒர்க் பண்ணின, சுரேஷ் ராஜகுமாரி இயக்குறார்னு சொன்னதும் சரின்னு சொன்னேன். ஒரு உண்மைச் சம்பவக் கதையை ரொம்ப அருமையா பண்ணியிருக்கார். வசனங்களை எல்லோருமே பாராட்டுவாங்க.
‘டாணாக்காரனு’க்கு 15 கிலோ உடல் எடை குறைச்சு நடிச்சேன். இதுல 15 கிலோ எடை அதிகரிச்சேன். போலீஸ் துறைக்குள்ளேயே இருந்து ஊறினவன் எப்படியிருப்பான்? அவன் மனநிலை எப்படியிருக்கும்? அவன் மற்றவங்களை எப்படி பார்க்கிறான்னு அந்த கேரக்டர் இருக்கும். நடிகனா இருக்கிறதால, நிறைய வாழ்க்கையை வாழலாம்ல. இந்த கதாபாத்திரத்துக்காக வேறொரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கேன்.
என் மேல இருக்கிற அழுத்தமே சினிமாவுல மூன்றாவது தலைமுறை நடிகன் அப்படிங்கறதுதான். தாத்தா (சிவாஜி கணேசன்) படங்கள் பண்ணின வேகத்துக்கும் அப்பா (பிரபு) படங்கள்ல நடிச்ச வேகத்துக்கும் நான் இப்ப பண்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அப்படித்தான் சினிமாவும் வளர்ந்திருக்கு. இந்த நேரத்துல 25 படங்களை கடந்திருக்கிறதே பெரிய விஷயம்தான்.
என்னோட 25 வது படம், 2025-வது வருஷம் 25-ம் தேதி ரிலீஸ் ஆகறது மகிழ்ச்சியா இருக்கு. அடுத்த 25 வருஷம் என்ன பண்ணப் போறேன்னு கேட்டா, எங்கிட்ட அப்படி எதுவும் இல்லை. இன்னைக்கு இங்க இருக்கிறதையே, நான் திட்டமிடலை. அதனால ரொம்ப எதையும் யோசிக்க மாட்டேன்.
அன்னன்னைக்கு என்ன பண்ணணுமோ, அதை மட்டுமே பார்ப்பேன். அதிகம் எதிர்பார்த்தா, அதுவே சில நேரம் ஏமாற்றமாயிடும். அடுத்த 25 வருஷத்துல இன்னும் அதிகமான அனுபவங்கள் கிடைச்சிருக்கும். சினிமாங்கறது கற்றல் தானே. சினிமாவுக்கு வந்த இத்தனை வருஷத்துல நான் தெரிஞ்சுகிட்ட விஷயங்களை அடுத்தடுத்த வருஷங்கள்ல இன்னும் சிறப்பா பயன்படுத்துவேன்னு நினைக்கிறேன்’ என கூறியுள்ளார்.


