சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆன்மீகவாதிகளுடன் அவருக்கு நட்பு அதிகரித்த பிறகு அவரிடம் இந்த பழக்கம் உருவானது.
கொரோனா பரவல் மற்றும் தனது உடல்நிலை காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக வெளியிடங்களுக்கு செல்வதை ரஜினி தவிர்த்து வந்தார். இமயமலை பயணத்தையும் அவர் ஒத்தி வைத்திருந்தார். “அண்ணாத்த” படம் தொடங்குவதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஜினிகாந்த் திடீரென இமயமலைக்கு சென்றார். அந்த பயணம் குறுகிய கால ஆன்மீக யாத்திரையாக இருந்தது.
அவர் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) உலகம் முழுக்க வெளியாக உள்ளது. இந்த படம் ரஜனி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இதையடுத்து மீண்டும் இமயமலை பயணத்தை தொடங்க ரஜினி முடிவு செய்தார். அதன்படி இன்று (புதன்கிழமை) நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை தொடங்கினார்.
இன்று காலை 8 மணிக்கு அவர் தனது வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் அவரை நிருபர்கள் பேட்டி கண்டனர். ஆனால் அவர் விரிவாக பதில் அளிக்க மறுத்து விட்டார். ரஜினிகாந்த் சென்னையில் இருந்து விமானத்தில் பெங்களூரு சென்றார். பெங்களூரில் இருந்து அவர் இமயமலைக்கு பயணமாகிறார்.

