Tamilstar
Spiritual

உங்க வீட்டில் இந்த படங்கள் எல்லாம் ஒட்டி வைத்திருக்கிறீர்களா? வீட்டில் இருக்க வேண்டிய படங்களும், அதன் பலன்களும்!

வீடு என்று ஒன்று இருந்தால் அதை சுற்றிலும் அலங்கார பொருட்களும் இருக்கத்தான் செய்யும். எல்லோருடைய வீட்டிலும் அவர் அவரின் விருப்பத்திற்கு ஏற்ப அவரவரின் வாழ்க்கை சூழ்நிலைக்கு ஏற்ப அலங்காரங்களை செய்து வைப்பது உண்டு. அந்த வகையில் நம்முடைய வீட்டில் இருக்கும் படங்கள் நமக்கு நிறையவே நற்பலன்களை அள்ளிக் கொடுக்கிறது என்கிறது வாஸ்து சாஸ்திரம். இப்படி நம்முடைய வீட்டில் இருக்கும் படங்களை வைத்து நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முதலில் தலைவாசலை பார்ப்போம், தலை வாசலில் கஜம் என்னும் யானை படம் ரொம்பவே நல்ல பலன்களை கொடுக்குமாம். திருஷ்டி கணபதி, கஜலட்சுமி, மகாலட்சுமி ஆகியோரின் படங்கள் இருப்பது விசேஷமானது. குதிரை லாடம், குதிரை படம், யானையுடைய கண் மட்டும் வைத்திருப்பது போன்றவையும் திருஷ்டிகளை அகற்றி நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை எதிர்த்து போராடுமாம். இதில் செல்வ வரவை கொடுக்கக் கூடிய லட்சுமி, கஜலட்சுமி போன்றவற்றின் படங்கள் வீட்டிற்கு உள்ளே வருவது போல உட்புறமாக மாட்டி வைக்க வேண்டும். வெளியே வாசலை பார்த்தவாறு வைக்க கூடாது.

அடுத்ததாக வரவேற்பறையில் வாஸ்து ரீதியாக அதிர்ஷ்டங்களை கொடுக்கக்கூடிய சில படங்களை வைக்கலாம். இதில் ஏழு குதிரைகள் ஓடிக் கொண்டிருக்குமாறு இருக்கும் படங்கள் வைப்பது விசேஷமானது. வீணை, தம்புரா போன்றவற்றை மீட்டுவது போல இருக்கும் படங்களும், இசை கருவிகளின் படங்களும் மாட்டி வைத்திருந்தால் அங்கு அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படுமாம்.

வரவேற்பு அறையில் வண்ண மீன்கள் தொட்டியில் வைத்து வளர்ப்பது, எப்பொழுதும் ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றின் வாசம் வீசுமாறு ஒரு பவுலில் போட்டு வைப்பது, கண்ணாடி பாத்திரத்தில் கல் உப்பு, கண்ணாடி தம்ளரில் தண்ணீரில் எலுமிச்சை பழம் ஆகியவற்றை போட்டு திருஷ்டி கழிப்பது போன்றவற்றையும் செய்யலாம். இவையெல்லாம் வரவேற்பு அறையில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான ஆன்மீக குறிப்புகள் ஆகும். விலங்குகள் வேட்டையாடுவது, உக்கிர தெய்வங்களின் படங்களை வரவேற்பறையில் மாட்டக்கூடாது.

படுக்கை அறையில் எப்பொழுதும் வண்ண மயமான பூக்கள், அழகிய கட்டிடங்கள், செல்லப் பிராணிகள், மழலை செல்வங்கள் சிரிப்பது போன்ற படங்கள், அழகிய புள்ளி மான், தோகை விரித்த மயில், அன்னப்பறவைகள், பறக்கும் புறாக்கள், மனம் ஒருமித்த ஆண் பெண் இருவரும் அன்பாக இருக்கக் கூடிய படங்கள் போன்றவற்றை மாட்டி வைத்திருந்தால் அதிர்ஷ்டங்களும், நிம்மதியும் குவியுமாம். சண்டை சச்சரவு போட்டிருக்கும் தம்பதிகள் கூட, இந்த படங்களை எல்லாம் பார்க்கும் பொழுது மனம் மாறி ஒற்றுமையுடன் இருக்க முயற்சி செய்வார்களாம்.

சமையலறையில் படங்களை மாட்டி வைக்கக் கூடாது. அன்னபூரணியின் படம் அல்லது சமையல் சார்ந்த அழகிய வண்ண ஸ்டிக்கர்கள் போன்றவற்றையும் ஒட்டி வைக்கலாம். அன்னபூரணியின் படம் இருப்பது வறுமையை போக்கி தன, தானியத்தை பெருக செய்யும். ஒவ்வொரு முறை அன்னபூரணியை பார்த்துக் கொண்டே சமைக்கும் பொழுது உங்களுக்கு சமையலில் பக்குவமும், ருசியும் அதிகரிக்குமாம். வரவேற்பறையில் அடர்த்தியான நிறங்களை கொண்ட வர்ண பூச்சிகளை தவிர்க்க வேண்டுமாம். லைட் கலர்ஸ் என்னும் எளிமையான வண்ணங்களில் பெயிண்ட் அடித்தால் காண்போரை கவர்ந்திழுக்குமாம். படுக்கை அறையில் டார்க் நிறத்தில் பெயிண்ட் அடிக்கும் பொழுது அங்கு மன நிம்மதி கிடைக்கும். எனவே எந்தெந்த இடங்களில் எந்தெந்த படங்களை மாட்டி வைத்தால் அதிர்ஷ்டம் வரும்? மனதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் குடிகொள்ளும்? என்பதை கவனியுங்கள்.