mookuthi amman 2 movie review
பெண் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றும் நயன்தாராவுக்கு அடிக்கடி விசித்திரமான கனவுகள் வருகின்றன. அந்தக் கனவுகளில் தோன்றும் அரக்கர்கள், மயிலாஞ்சி என்ற ஊருக்கு வரும்படி அவரை அழைக்கின்றனர். இதனால் ஒருவித குழப்பத்திலும் மன உளைச்சலிலும் இருக்கும் நயன்தாரா, ஒரு கட்டத்தில் விருப்பப் பணி மாறுதல் பெற்றுக்கொண்டு தனது தாய் ஊர்வசியுடன் அந்த ஊருக்குச் செல்கிறார்.
நயன்தாரா ஊருக்கு வந்திருப்பதை அறியும் ரெஜினா கசாண்ட்ரா, அவரைப் பழிவாங்கத் துடிப்பதுடன் பலிகொடுக்கவும் திட்டமிடுகிறார். தீய சக்திகள் நயன்தாராவை நெருங்கும் ஒவ்வொரு முறையும் அவருக்குள் விசித்திரமான மாற்றங்களும் அதிர்வுகளும் ஏற்படுகின்றன. ஒரு கட்டத்தில் நயன்தாரா யார் என்ற உண்மை வெளிப்படத் தொடங்குகிறது. இதையடுத்து, 2,000 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற வரலாற்றுச் சம்பவங்கள் திரையில் விரிகின்றன. ஊர் மக்களைக் காப்பாற்றும் தெய்வமாக மூக்குத்தி அம்மன் மீண்டும் அவதாரம் எடுத்திருப்பது தெரியவருகிறது. ஆனால், தனது உண்மையான அடையாளமே தெரியாத நயன்தாராவை ரெஜினா ஏன் கொலை செய்யத் துடிக்கிறார்? அவரது பழிவாங்கும் திட்டம் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
பெண் காவலராக அப்பாவித்தனமும் இயல்பான தோற்றமும் கொண்டு வலம் வரும் நயன்தாரா, அம்மனாக அவதாரம் எடுக்கும் தருணங்களில் முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தைக் காட்டுகிறார். குறிப்பாக, சூலம் ஏந்தி கம்பீரமாக நிற்கும் காட்சிகளிலும், தீய சக்திகளுக்கு எதிராகச் சீறிப்பாயும் தருணங்களிலும் ரசிகர்களுக்கு மெய்சிலிர்ப்பை ஏற்படுத்துகிறார்.
படத்தின் மற்றொரு முக்கிய பலமாக அமைந்திருப்பவர் ரெஜினா கசாண்ட்ரா. வில்லத்தனமான பார்வை, ஆவேசமான உடல்மொழி, தீப்பிழம்பாகச் சுடும் கண்கள் என ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பால் மிரட்டியிருக்கிறார். ஊர்வசி தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் சிரிக்க வைக்கிறார். யோகி பாபு இடம்பெறும் காட்சிகளும் கலகலப்பை ஏற்படுத்துகின்றன. இனியா, துனியா விஜய், சிங்கம் புலி, சுனில், மைனா நந்தினி, வர்ஷினி, நிதின் சத்யா உள்ளிட்டவர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் வரும் குஷ்பு, சினேகா ஆகியோரும் குறைவான காட்சிகளில் வந்தாலும் கவனம் ஈர்க்கிறார்கள்.
கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு படத்தின் பிரம்மாண்டத்துக்குப் பக்கபலமாக அமைந்துள்ளது. ஹிப் ஹாப் தமிழாவின் பாடல்களும் பின்னணி இசையும் கதையின் வேகத்துக்கு உறுதுணையாக இருக்கின்றன.
குறிப்பாக, கிராபிக்ஸ் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பலமாக உள்ளன. அமானுஷ்யக் காட்சிகள், அம்மனின் சக்தியை வெளிப்படுத்தும் தருணங்கள், சண்டைக் காட்சிகள் எனப் பல இடங்களில் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு வெளிப்படுகிறது. முதல் பாதியில் கதையின் மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்வதும், நயன்தாராவின் உண்மையான அடையாளத்தை நோக்கிக் கதை நகர்வதும் சுவாரசியத்தை ஏற்படுத்துகின்றன.
அம்மன் அவதாரம், தீய சக்திகளுக்கு எதிரான போராட்டம், பிரம்மாண்டமான காட்சியமைப்பு எனப் பல அம்சங்களுடன் ரசிகர்களைத் தொடர்ந்து படத்துடன் பயணிக்க வைக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. முதல் பாகத்தின் கதைக்களத்தையும் பாணியையும் அப்படியே தொடராமல், இரண்டாம் பாகத்தை முற்றிலும் மாறுபட்ட களத்தில் உருவாக்கியிருப்பது கவனிக்கத்தக்கது.
நயன்தாராவின் அம்மன் அவதாரம், ரெஜினாவின் வில்லத்தனம், ஊர்வசியின் நகைச்சுவை, பிரம்மாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் எனப் பல அம்சங்கள் ரசிக்க வைக்கின்றன. மொத்தத்தில், பக்தி, மிரட்டல், நகைச்சுவை, பிரம்மாண்டம் என அனைத்தையும் கலந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறது ‘மூக்குத்தி அம்மன் 2’.
Ameera Official Teaser | Senthamizhan Seeman | RK Suresh | Anu Sithara | MS Bhaskar
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக…
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி,…
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக…
நடிகர் சூர்யாவுக்கு இந்த ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ எனத் தொடர்ந்து இரண்டு படங்கள்…