ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சீமான் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்!
பூர்வகுடி மக்களின் வலிமிகுந்த வாழ்வியல் காவியம்!
அன்புத்தம்பி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தம்பிகள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் இரு கதாநாயகர்களாக நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டு களித்தேன்.
உலகெங்கும் பூர்வகுடி மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் மிக முக்கிய வாழ்வியல் சிக்கலை கதைக்களமாக கொண்டு, தற்காலச் சூழலில் சொல்லப்பட வேண்டிய மிக அழுத்தமான கருத்தினை மிக அழகாக திரையில் காட்சிப்படுத்தியுள்ளார் தம்பி கார்த்திக் சுப்புராஜ்.
‘நீரின்றி அமையாது உலகு’ என்று வள்ளுவப் பெருந்தகை கூறியது எந்த அளவிற்கு உண்மையோ, காடின்றி அமையாது நாடு என்பதும் அதே அளவிற்கு உண்மை. அதனாலேயே மற்றொரு குறளில் “மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்” என்கிறார். அந்த வகையில் காடு மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் மிக முக்கியமானது என்பதனை இத்திரைப்படம் வலியுறுத்துகிறது. அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியலை அழுத்தமான உரையாடல்களோடு இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மிகச்சிறப்பானது.
யானைகள் இல்லாமல் காடு இல்லை! காடு இல்லாமல் நாடு இல்லை! என்பவை போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிற செய்தியல்ல; மிகப்பெரிய புவியியல் உண்மையாகும். நாம் வாழும் பூமி 70 விழுக்காடு நீரால் சூழப்பட்டுள்ளது. 30 விழுக்காடுதான் நிலத்தால் ஆனது. அதில் பெரும்பகுதி காடுகள்தான். மனிதர்கள் நாம்தான் சமூக விலங்காக மாறிவிட்டோம். ஆனால் கோடிக்கணக்கான உயிரினங்கள் இன்றளவும் காடுகளை நம்பியே வாழ்கின்றன. அத்தகைய அதிமுக்கியத்துவம் வாய்ந்த பல்லுயிர்ப் பெருக்க வாழ்விடமாக விளங்கக்கூடிய வனங்களையும், அதன் வளங்களையும் அழித்தொழிப்பதென்பது எத்தகைய பேராபத்தினை ஏற்படுத்தும் என்பதை மிக ஆழமாக பதிவுசெய்யுள்ளர் தம்பி கார்த்திக் சுப்புராஜ்.
இதை வெறும் படம் என்று கூறிவிட முடியாது. நம் அனைவருக்குமான பாடம். நாம் காட்டுவாசி, ஆதிவாசி என்றெல்லாம் வாய்மொழியாக கூறிவிடுகிறோம். உண்மையில் அவர்கள் மலைவாழ் மக்கள். நம் மண்ணின் தொல்குடி மக்கள். காடும், காடு சார்ந்த நிலத்திற்கும் பாதுகாப்பு அரணே அவர்கள்தான். ஆனால் இன்றைக்கு வளவேட்டைக்காக முதலில் பலியிடப்படுவதும் அம்மக்கள்தான். தண்டகாரண்யத்தில் பச்சை வேட்டை என்றொரு திட்டத்தைத் தொடங்கி அங்கு இருக்கும் 250 இலட்சம் கோடி மதிப்பிலான வளங்களை எடுப்பதற்காக அங்கு வாழும் மக்களை அப்புறப்படுத்த முனைந்தபோது, உங்களுக்கு இது காடு, எங்களுக்கு இது வீடு இதை விட்டு செல்லமாட்டோம் என்று மறுத்துவிட்டனர். அந்த கருத்தைத்தான் இத்திரைப்படமும் வலியுறுத்துகிறது.
என் மண், என் நிலம், என்னுடைய வாழ்விடம் அதைவிட்டு ஒருபோதும் செல்ல முடியாது, உயிர் போனாலும் இந்த மண்ணில்தான் என்று படம் பேசும் கருத்தில்தான் ஒவ்வொரு தேசிய இனங்களின் போராட்டமும் தொடங்கியது. அதுதான் நேற்று ஈழத்தில் நடந்தது; இன்று பாலஸ்தீனத்திலும் நடைபெறுகிறது. ‘சூழலியலின் தாய்’ வங்காரி மாதாய் உலகெங்கிலும் போர் என்பதே வள வேட்டைக்காகத்தான் நடைபெறுகிறது என்கிறார். அப்பேருண்மையை குறிப்பிட்ட நேரத்திற்குள் திரைமொழியில் அழுத்தமாக சொல்ல முடிந்தது என்பதே இத்திரைப்படத்தின் மிகப்பெரிய சாதனையாகும்.
தம்பி கார்த்திக் சுப்புராஜ் அவர்களால் மிகுந்த சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். நான் தரையில் பேசுவதை தம்பிகள் திரையில் நேர்த்தியாக மொழிப்பெயர்த்துள்ளதைக் கண்டபோது, இத்திரைப்படம் என் இதயத்திற்கு நெருக்கமாக நேரடித் தொடர்பினை ஏற்படுத்திவிட்டது.
இத்திரைப்படத்தில் என்னுடைய தம்பி எஸ்.ஜே.சூர்யா அவர்கள் இதுவரை இல்லாத வகையில் நடிப்பில் புதியதொரு பாய்ச்சலை வெளிப்படுத்தியுள்ளார். மீண்டும் கதையின் நாயகனாக வேறு ஒரு பரிணாமத்தில் தோன்றி அசத்தியுள்ளார். அதைப்போன்று தம்பி ராகவா லாரன்சு அவர்களுக்கும் இது முற்றிலும் மாறுதலான படமாக அமைந்துள்ளது. இரு நாயகர்களுமே போட்டி போட்டு நடித்து படத்தினை வெற்றிப்பெறச்செய்துள்ளனர். புதுமுகம் தம்பி விது அவர்களின் நடிப்பு வியக்க வைக்கிறது. மாமா இளவரசு மற்றும் கதையின் நாயகிகளான நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோரின் நடிப்பும் படத்தினை மேலும் மெருகேற்றியுள்ளது. யானைகள் வரும் சண்டைக் காட்சிகள் வரைகலையில் எடுக்கப்பட்டதுதானா என்று சந்தேகிக்கும் அளவிற்கு மிகவும் உயிரோட்டமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் அமைந்துள்ளது.
தம்பி திருநாவுக்கரசுவின் மிகச்சிறப்பான ஒளிப்பதிவும், தம்பி சபீக் முகமதுவின் படத்தொகுப்பும் காடுகளில் பயணித்த அனுபவத்தை தருகிறது. தம்பி சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு மேலும் வலுசேர்க்கிறது. கலை இயக்குநர் சந்தானத்தின் கலைப் பணிகள் உண்மையின் நெருக்கத்திற்கு கொண்டு சென்று நம்மை படத்தோடு ஒன்றச் செய்கிறது. படத்தில் பல விதமான சண்டை காட்சிகள் இருந்தாலும் ஒவ்வொன்றும் தனித்துவமாக செய்திருக்கின்ற தம்பி திலீப் சுப்புராயனின் பணி பாராட்டத்தக்கது. அதேபோன்று, படத்தில் நடித்துள்ள அனைத்து புது முகங்களின் தேர்வும், அவர்களின் இயல்பான நடிப்பும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.
இப்படியொரு அழுத்தமான கதையினை திரைப்படமாக எடுக்க முன்வந்த தயாரிப்பு நிறுவனத்திற்கும், படம் மிகச்சிறப்பாக வெளிவந்து வெற்றி பெற்றுள்ளமைக்குக் காரணமான திரைக்கதை, கதைக்களம், திரை உருவாக்கம் என அனைத்திலும் தனக்கென்று தனிவழியைப் பின்பற்றி ஆகச்சிறந்த படைப்புகளை அளித்து வரும் இயக்குநர் தம்பி கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கும், தம்பிகள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்சு ஆகியோருக்கும், கதை மாந்தர்களாக நடித்துள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பழங்குடி மக்களின் வாழ்வியலை, அவர்களின் உரிமைப்போராட்டத்தை பேசும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை இதுவரை காணத் தவறிய உலகெங்கும் பரவிவாழும் என் பேரன்பிற்குரிய தமிழ் மக்கள் அனைவரும், நம் உள்ளத்து உணர்வினைப் பேசும் இத்திரைக்காவியத்தைத் திரையரங்குகளுக்குச் சென்று கண்டு களித்து படத்திற்கு மிகப்பெரிய ஆதரவினை வழங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…
Veiyil Lyrical Video – Pulse Movie | Master Mahendran | Rishika Rajveer | Nawin Ghanesh…
God Mode Lyric Video | Karuppu | Suriya | RJB | Trisha | SaiAbhyankkar |…
Pagal Kanavu Official Teaser | Faisal Raj | Krishnanthu | Athira Santhosh | Shakeela |…
Aaryan Trailer Tamil | Vishnu Vishal | Praveen K | Ghibran | Selvaraghavan | Shraddha…
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…