Tamil Nadu Government Approves 6 AM Special Shows During Festival Weekends
தமிழ்நாட்டில் பண்டிகைக் கால வார இறுதி நாட்களில் புதிய திரைப்படங்களை காலை 6 மணி முதல் திரையிடவும், அதிகாலை 2.30 மணி வரை காட்சிகளை நடத்தவும், அதிகபட்சம் ஆறு காட்சிகள் வரை திரையிடவும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. இந்தப் புதிய உத்தரவு, நீண்டகாலமாகக் காத்திருந்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திரையரங்கு ஒன்றில் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் காலை 5 மணி மற்றும் 6 மணி சிறப்புக் காட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமிழ் திரைப்படங்கள் காலை 6 மணிக்கே திரையிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் காலை 9 மணிக்குப் பிறகே படங்கள் வெளியாகும் நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக, தமிழகத்தில் திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்பே அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள், விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து வந்தனர். இதனால் படங்களின் கதைகள் மற்றும் முக்கியத் திருப்பங்கள் தமிழக ரசிகர்களுக்கு முன்கூட்டியே தெரியவரும் சூழல் உருவானது. மேலும், உலகளாவிய அளவில் தமிழ் திரைப்படங்களின் ஒரே நேர வெளியீட்டிலும் சிக்கல்கள் நீடித்து வந்தன.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்குகள் மற்றும் மல்டிப்ளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கங்கள், விநியோகஸ்தர்கள் சங்கம் உள்ளிட்ட முக்கியத் திரைத்துறை அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழக அரசுடன் முத்தரப்பு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தின. அப்போது, பண்டிகைக் கால வார இறுதி நாட்களில் காலை 6 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கூடுதல் காட்சிகளைத் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என ஒருமித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், திரையுலகினரின் கோரிக்கையை முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய அனுமதியைப் பெற்றுத் தந்துள்ளார். இதன் மூலம் பண்டிகைக் கால வார இறுதி நாட்களில் புதிய திரைப்படங்களை ஆறு காட்சிகள் வரை திரையிடுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும், உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் திரைப்படங்களை வெளியிடுவதற்கும் இந்த உத்தரவு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, 2015 முதல் 2022ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட 224 திரைப்படங்களுக்கு நிலுவையில் இருந்த மானியத் தொகையை வழங்கி தயாரிப்பாளர்களை ஊக்குவித்த தமிழக அரசு, தற்போது சிறப்புக் காட்சிகளுக்கும் அனுமதி அளித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்குத் தமிழ்த் திரையுலகினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திரையுலகின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றிய முதலமைச்சர் விஜய் மற்றும் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோருக்குத் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில்…
நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் பைட்’ திரைப்படம் வரும் டிசம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு…
Dayangaram Official Teaser | VJ Siddhu | Siddhu Kumar | Dr. Ishari K Ganesh |…
O Mysaa Re Lyrical Video | Mysaa | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy|…
John Doe Official Trailer | Arjun Das, Sanchana Natarajan | Madhumita | Arka Mediaworks |…
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல…