சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படமும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படமும் பொங்கலை முன்னிட்டு களம் இறங்குகின்றன.
இந்நிலையில், சென்னையில் ஃபேன்லி (Fanly) என்ற ஆப்பின் அறிமுக விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அந்நிகழ்வில் சிவகார்த்திகேயன் பேசும் போது,
‘இந்த மேடையில் இருந்த 3 பேருக்குமே மூளை அதிகம், எனக்கு குறைவு. அதனாலேயே நடிகராக இருக்க முடிகிறது. மூளை அதிகமாக இருந்திருந்தால் இயக்குநரை டார்ச்சர் செய்ய ஆரம்பித்திருப்பேன். இப்போது அவர்கள் சொல்வதைக் கேட்டு நடித்து வருகிறேன்.
எனக்கு எப்போதுமே என்னை வணங்கும் ரசிகர்கள் தேவையில்லை. அவர்கள் கடவுளையும், அப்பா – அம்மாவை வணங்கினால் போதும். என்னுடன் அன்பாக பேசுவதையும், அண்ணனாக பழக வேண்டும் என்பதையே ஆசைப்படுகிறேன். அதனாலேயே எப்போதுமே தம்பி – தங்கைகள் என்று அழைக்கிறேன்.
இப்போது சமூக வலைதளத்தைப் பார்த்தாலே அனைவருக்கும் பயம் வருகிறது. அனைத்து சமூக வலைதளத்திலும் எனது பெயரில் கணக்கு இருக்கிறது. அதை வேறொருவர் தான் நிர்வகித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கம் மட்டுமே அவ்வப்போது சென்று வந்தேன். அதிலும் தவறுகள் செய்வதால், இப்போது அந்தப் பக்கமும் போவதில்லை. இப்போது எதிர்மறை கருத்துகள் தான் வைரலாகிறது என்பதால் அதை தான் விளம்பரம் செய்கிறார்கள். பொய்யாவது ஏதேனும் சொல்வோம், அதை தான் நிறையப் பேர் பார்ப்பார்கள் என நினைக்கிறார்கள்’ என கூறியுள்ளார் எஸ்கே.

